இந்தியாவிலேயே கல்வி தரத்தில் தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகின்றது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்திருக்கின்றது.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தின் கல்வி தரம் சரியாக இல்லை என்று விமர்சித்து பேசி இருந்தார். இது தொடர்பாக பலரும் அவரின் கருத்துக்கு பதில் அளித்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வி தரம் தான் சிறந்து விளங்குகின்றது என்று தெரிவித்திருக்கின்றது .
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டு குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்கல்வி பெற வேண்டும் என்று பல திட்டங்களை உருவாக்கினார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை போற்றும் வண்ணம் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சிக்கு என 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள் ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்று சுவர்கள் மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்கம் மூலம் 2022-23 ஆம் நிதி ஆண்டில் நபார்டு கடன் உதவி திட்டம் கீழ் 813 கோடி செலவில் 418 அரசு உயர்நிலை மட்டும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள், 57 ஆய்வகங்கள், 10 மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த செப்டம்பர் 15, 2022 அன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டு பல லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகிறார்கள். இதையடுத்து கடமையை 2024 ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் செயல்படுத்தி மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு வருகிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு 186 கோடியில் 614 பள்ளிகள், 3238 வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லியில் 13.8.2024 அன்று மத்திய அரசின் உயர்கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்திகள் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தியுள்ளது. அதாவது, தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165 எனத் தரவரிசைப்படுத்தப்பட்டு உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













