Latest News
பாம்பன் ரயில் பாலம்… அடுத்த மாதம் திறந்து வைக்கின்றார் பிரதமர் மோடி…!
பாம்பன் பாலத்தின் புதிய ரயில் பாலத்தை அடுத்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கின்றார்.
தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக்ஜல சந்தையில் அமைந்திருப்பது பாம்பன் ரயில் பாலம். ராமேஸ்வரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடல்வழி வணிகத்தில் நம் நாடு தலைதூக்கிய காலத்தில் இந்த ரயில் பாலம் முக்கிய பங்கு வகித்தது.
கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்டவாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.5 கிலோமீட்டர் நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என அழைக்கப்படுகின்றது. 1964 ஆம் ஆண்டு பாம்பன் தீவை பெரும் புயல் தாக்கியது. அப்போது இந்த பாலம் பெரும் அளவு சேதம் அடைந்தது. இதனை பழுதுபார்க்கும் பணிகள் நடந்தன
இதற்கிடையே 1988 பாம்பன் ரயில் பாலத்துக்கு இணையான ஒரு சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதுவரை இந்த ரயில் பாலம் மட்டுமே மண்டபத்திற்கும் ராமேஸ்வதற்கும் இடையிலான ஒரு இணைப்பாக இருந்தது. தற்போது 110 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிக்கடி கடலுக்குள் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக பாலம் அதன் வலுத்தன்மையை இழந்து சேதம் அடைந்திருக்கின்றது.
இதன் காரணமாக புதிய பாலம் ஒன்றை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018 ஆம் ஆண்டு புதிய பாடம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. புதிய பாம்பன் பாலத்துக்காக திட்டச் செலவு 535 கோடியாக அறிவிக்கப்பட்டன. தற்போது இந்த பாலம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் ராமேஸ்வரம் மண்டபம் இடையே ரயில் சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்கு பாலம் இதுதான். இந்த பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. அத்துடன் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் மற்றும் பல திட்டங்களையும் திறந்து வைக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.