காசநோய் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்புக் கம்மியாக இருப்பதால் அதைக் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தலாமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1100 ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று காலை வரை 67 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மதியம் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில் திடீரென நேற்று இரவு தமிழகத்தில் மேலும் 50 பேருக்குக் கோரொனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரையில் எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் காசநோய் தடுப்பு மருந்தின் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியுமா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனென்றால் ஜப்பான்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் சிறுவயதில் பிசிஜி எனப்படும் காசநோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படும் நாடுகளில் கொரோனா பாதிப்பு கம்மியாக உள்ளது. ஆனால் பிசிஜி தடுப்பூசி திட்டம் அமலில் இல்லாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் அங்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது.
இதனால் காசநோய் தடுப்பு மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியுமா என ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 4,000 மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வு வெற்றி பெற்றால் கொரோனாவை ஒழித்துக் கட்டமுடியும் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது.







