பேராசிரியர் க அன்பழகனுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் கொண்டு வந்து கொடுத்த தபால்காரர் சண்முகம் இன்றும் அவருக்கு தபால் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியாக அமைந்தது.
பேராசிரியர் அன்பழகன் இருக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியின் தபால் காரர் சிதம்பரம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு வரும் தபால்களை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்து சென்றுள்ளார் இவர். இந்நிலையில் இன்று அன்பழகன் மறைந்ததை அடுத்து அவருக்கு வந்த தபாலையும் அஞ்சலி செலுத்த ஒரு மாலையும் கொண்டுவந்துள்ளார்.
அங்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நின்றனர்.ஒருபக்கம் கட்சி நிர்வாகிகள் வேறு வழியில் வீட்டிற்குள் செல்ல முயன்றதால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வரிசையில் நின்றால் குறைந்தது ஒருமணி நேரமாகும்.மற்றொரு வழியில் கூட்டநெரிசலால் போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை.வரிசையில் நின்றால் தனது வேலை பாதிக்கும் மற்ற தபால்களை டெலிவரி செய்ய முடியாது.போலீசாரும் உள்ளே விடாமல் தடுத்ததால் சோகத்துடன் இருந்தார் சிதம்பரம். எப்படியாவது கடைசியாக அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு போலீசாரிடம் கேட்டபோதும் வாய்ப்பில்லாமல் போனது. கடைசியில் வேறு வழியில்லாமல் மாலையையும் பேராசியருக்கு வந்த தபாலையும் போலீசாரிடம் கொடுத்து நீங்களே என் சார்பில் அஞ்சலி செலுத்துங்கள் என்று கொடுத்துவிட்டு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் சிதம்பரம்.
இந்த சம்பவமானது அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.








