ஒடியா திரையுலகில் புதிய மைல்கல்லாக உருவெடுத்துள்ள அமானுஷ்யத் திரில்லர் திரைப்படமான ‘தஹான் – தி ஈவில் வித்தின்’ (Dahaan: The Evil Within) விரைவில் பிரபல ஓடிடி தளமான அஹா (aha) தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது. இது ஒடியா சினிமா வரலாற்றில் ஓடிடி தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியப் படமாகக் கருதப்படுகிறது.
இயக்குநர் அனுபம் பட்நாயக் (Anupam Patnaik) இயக்கத்தில், பாஷா பட்நாயக் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிரோசிகா மிஸ்ரா, பர்ஷா பட்நாயக், சாம்ராட் மகாபத்ரா மற்றும் சௌத்ரி ஜெயபிரகாஷ் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரம்பரியமான குடும்பத்திற்குள் தலைமுறை தலைமுறையாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டி திறக்கப்படுவதன் மூலம் வெளிப்படும் பழமையான தீய சக்தி எவ்வாறு ஒரு சிறுமியை ஆட்கொள்கிறது என்பதையும், அதிலிருந்து மீள அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் இப்படம் பேசுகிறது.
திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது அஹா ஓடிடி தளத்தில் டிஜிட்டல் ரிலீசாக வரவுள்ள இப்படம், ஹாரர் சினிமா ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திகிலூட்டும் திரைக்கதையும், மிரட்டலான பின்னணி இசையும் இப்படத்தின் பலமாக அமைந்துள்ளதால், ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர்.













