தமிழ் சினிமாவில் வழக்கமான கமர்ஷியல் பாணியிலிருந்து விலகி, அழுத்தமான சமூகக் கருத்துக்களையும் பெண்ணுரிமை மற்றும் மண்ணுரிமையையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வன்னி’. செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் மற்றும் சுக்கிரன் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, எஸ்.ஏ. கார்த்திகேயன் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இப்படத்தில் நடிகை இனியா முதன்மைக் கதாபாத்திரத்தில், ஒரு பெண் போராளியின் உணர்வுபூர்வமான வாழ்க்கையையும் போராட்டத்தையும் பிரதிபலிக்கும் வலிமையான வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு இலங்கையைச் சேர்ந்த இசைக் கலைஞர் வாகீசன் ராசைய்யா இசையமைக்கிறார். லண்டனில் தனி இசை ஆல்பங்கள் மூலம் கவனம் பெற்ற இவர், ‘வன்னி’ திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இசையமைப்பது மட்டுமின்றி படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள இவர், இரண்டு பாடல்களைப் பாடியும் உள்ளார். கதையின் உணர்வுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இப்படத்தின் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடிகை இனியாவுடன் இணைந்து கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, பாலாஜி முருகதாஸ், சந்தான பாரதி, சரவண சுப்பையா, சுப்பிரமணிய சிவா, மீசை ராஜேந்திரன், பாய்ஸ் ராஜன், விசித்திரன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி மற்றும் இளம் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை ஏ. குமரன் ஒளிப்பதிவு செய்ய, பிரேம் குமார் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். சுகி தேவராஜ் கலை இயக்கத்தையும், கே.என். பத்மராஜா வசனத்தையும், தளபதி தினேஷ் சண்டைப் பயிற்சியையும் மேற்கொள்கின்றனர். தற்போது கும்பகோணம், இலங்கை, நாகப்பட்டினம், பூம்புகார் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கதையின் யதார்த்தம் குறையாமல் இருக்க உண்மையான களங்களில் படமாக்கப்பட்டு வரும் ‘வன்னி’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.













