நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்று இருந்த காந்தக் கண்ணழகி என்ற பாடல் யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பலவாறாக விமர்சிக்கப் பட்டாலும் அவர் படத்தில் இடம்பெறும் பாடல்கள் எப்போதுமே ஹிட்டாக அமையும். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அவரின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்றிருந்த காந்தக் கண்ணழகி எனும் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலையும் அவரே எழுதினார் என்பது கூடுதல் சிறப்பு.
சமூகவலைதளங்களிலும் கொண்டாடப் பட்ட அந்த பாடல் யுடியூபில் அதிகப் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில் இந்த பாடல் தற்போது யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மட்டுமே 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் ரௌடி பேபி பாடல் இதுவரை 80 கோடி பேரால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.









