இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ (Pisasu 2) திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தான் இணைந்த சுவாரசியமான பின்னணியையும், மிஷ்கின் மீதான தனது மதிப்பையும் விஜய் சேதுபதி மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி, மிஷ்கின் தனக்கு ‘பிசாசு 2’ கதையைச் சொன்னபோது அது மிகவும் அற்புதமாக இருந்ததாகவும், தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். முதல் பாகமான ‘பிசாசு’ படத்தில் பயமுறுத்தும் பேயாக இல்லாமல், உணர்வுப்பூர்வமாக மக்களுடன் இணையும் ஒரு பேயை மிஷ்கின் காட்டிய விதம் தனக்குப் பிடிக்கும் என்றும், குறிப்பாக புகைபோக்கி (Chimney) வழியாகப் பேய் வெளியே வரும் காட்சி, ராதாரவியின் நடிப்பு மற்றும் நடன அமைப்பு ஆகியவை அபாரமாக இருந்ததாகவும் பாராட்டினார்.
‘பிசாசு 2’ எழுத்து அதைவிடச் சிறப்பாக இருந்ததால், “எனக்கு ஏதேனும் கதாபாத்திரம் இருந்தால், இரண்டு நாட்கள் கூட நடித்துத் தரத் தயாராக இருக்கிறேன்” என்று மிஷ்கினிடம் கேட்டதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஷ்கின், “அன்று இரவே விஜய் சேதுபதியிடம் இருந்து எனக்கு போன் வந்தது. ‘எனக்கு 2 நாட்கள் நேரம் இருக்கிறது, இந்தப் படத்தில் நான் நடித்தே ஆக வேண்டும்’ என்று அவர் கூறினார். அப்போது அவருக்கென தனியாக எந்தக் கதாபாத்திரமும் என்னிடம் இல்லை. ஒரு சிறிய டாக்டர் கதாபாத்திரத்தை மட்டுமே எழுதியிருந்தேன். விஜய் சேதுபதி உள்ளே வந்ததும், அந்தக் காட்சியின் நீளத்தை அதிகரிக்காமல், அந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகப்படுத்தும் வகையில் காட்சியை மாற்றி எழுதினேன். அவரும் வந்து 2 நாட்களில் அற்புதமான நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், இவ்வளவு பெரிய நடிகருக்கு இப்படியொரு நல்ல மனம் இருப்பதைக் குறிப்பிட்ட மிஷ்கின், “விஜய் சேதுபதி நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ; அவர் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என்று நான் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “வில்லனாக நடிப்பது ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சுதந்திரத்தைக் கொடுக்கும்; அந்த வேடங்களில் மிகவும் சுதந்திரமாக நடிக்க முடியும்” என்று தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.













