தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கௌதம் கார்த்திக் (கௌதம் ராம் கார்த்திக்), அடுத்ததாகப் பிரபல தயாரிப்பு நிறுவனமான கண்ணன் ரவி குரூப் (Kannan Ravi Group) தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘KRG 05’ என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி, இத்திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ (Sengulam) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படம், மண் மணம் மாறாத அதிரடி ஆக்ஷன் பின்னணியில் தயாராகி வருகிறது. கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ‘வை ராஜா வை’ திரைப்படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் கௌதம் கார்த்திக் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது படத்திற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
மேலும், ‘செங்குலம்’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி, பிற முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













