தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக முத்திரை பதித்து வரும் நடிகர் சூரி நடிப்பில், புதிய களத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘மண்டாடி’ (Mandaadi). வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் (RS Infotainment) சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடலோரப் பின்னணியில், யாட் எனப்படும் படகுப் பந்தயப் போட்டிகளின் ஆதிக்கத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூரி முற்றிலும் மாறுபட்ட தீவிரமான தோற்றத்தில் நடிக்க, அவருக்கு எதிர்நாயகனாக தெலுங்கு நடிகர் சுஹாஸ் மிரட்டலான கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். இவர்களுடன் சத்யராஜ், மஹிமா நம்பியார், ரவீந்திர விஜய், பாலா சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். கிராமிய மணமும், கடல்சார் சவால்களும் நிறைந்த ஒரு குடும்பப் பாங்கான ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
View this post on Instagram
வெளியான டிரெய்லரில் இடம்பெற்றுள்ள கடற்காட்சிகள், எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மிரட்டலான பின்னணி இசை ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன. சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி உலகளாவிய திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஐமேக்ஸ் (IMAX) மற்றும் டால்பி சினிமா உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வடிவங்களிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.













