தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் (Sun Pictures), தனது அடுத்த மெகா ப்ராஜெக்டான ‘டிசி’ (DC) மூலம் உலக அரங்கில் தடம் பதிக்கத் தயாராகிவிட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) முதல்முறையாகக் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர், புகழ்பெற்ற கான் திரைப்பட விழாவில் (Festival de Cannes) வரும் மே 15, 2026 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவதாஸாக மாறும் லோகேஷ்
அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரு ராவான ஆக்ஷன் டிராமாவாக இருக்கும் என்பது ஏற்கனவே வெளியான டீசர்கள் மூலம் உறுதியாகியுள்ளது. ‘தேவதாஸ்’ (Devadas) மற்றும் ‘சந்திரா’ (Chandra) ஆகிய இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களையே படத்தின் தலைப்பாக ‘DC’ என வைத்துள்ளனர். இதில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற பெயரில் ரத்தமும் சதையுமான ஒரு ஆக்ஷன் ரோலில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi) நடித்துள்ளார்.
View this post on Instagram
டெக்னிக்கல் மிரட்டல்
படத்தில் லோகேஷ் கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகப் படம் மிகவும் வலுவாக உள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ள பாடல்கள் ஏற்கனவே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளன. முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார்.
சினிமா ரசிகர்கள் அனைவரும் லோகேஷை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியவராகவே பார்த்திருப்பார்கள். இப்போது அவர் திரையில் ரத்தக் கறை படிந்த கத்தியுடன் மிரட்டலாகக் களமிறங்குவது கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கான் திருவிழாவில் இதன் டிரெய்லர் வெளியாவது, தமிழ்ப் படங்களை உலக சந்தையில் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.













