2026-ம் ஆண்டு கோடை விடுமுறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் விருந்தாக அமையப்போகிறது. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் குறுகிய இடைவெளியில் வரிசையாக வெளியாக உள்ளதால், திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண உள்ளன. தனுஷ், சூர்யா, விஜய் மற்றும் விக்ரம் என டாப் ஹீரோக்களின் படங்கள் மோதிக்கொள்ளும் இந்தச் சம்மர் ரேஸ் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
முதலில், ஏப்ரல் 30-ம் தேதி தனுஷ் நடித்துள்ள ‘கர’ (Kara) வெளியாகிறது. ‘போர் தொழில்’ புகழ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், 1991-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து ஹீஸ்ட் த்ரில்லர் (Heist Thriller) கதையாகும். தனுஷ் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள இந்தப் படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் புரமோஷன் பணிகளுக்காக இன்று கோயம்புத்தூரில் பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது.
அடுத்ததாக, மே 14-ம் தேதி சூர்யாவின் ‘கருப்பு’ (Karuppu) களம் இறங்குகிறது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும். வின்டேஜ் சூர்யாவை மீண்டும் ஒரு அதிரடி ரோலில் திரையில் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. சூர்யாவின் கரியரில் இது ஒரு மிகப்பெரிய ‘சம்பவமாக’ அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ (Jananayagan) தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் உடனடியாக ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) இன்னும் நிலுவையில் உள்ளது. அதேபோல், நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ (Dhruva Natchathiram) படத்தின் சிக்கல்கள் தீரும் நிலைக்கு வந்துள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் சாதகமான முடிவு கிடைத்தால், மே மாதம் இரண்டாம் பாதியில் படம் ரிலீஸாக அதிக வாய்ப்புள்ளது.













