தூய்மை பணியாளர் வேலைக்கு பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் நாளுக்கு நாள் வேலையின்மை பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். பிடித்த வேலை போய் கிடைக்கும் வேலைக்கு சென்று விடுவோம் என்ற நிலை தற்போது உருவாகி இருக்கின்றது. அதிலும் வட இந்தியாவில் அதிக அளவு வேலையின்மை திண்டாட்டம் நிலவி வருகின்றது .
இந்நிலையில் தூய்மை பணியாளர் வேலைக்கு பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அரியானா மாநில அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு 6000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள் சுமார் 40,000 பட்டதாரிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் என்று 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பதால் இந்த வேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அரியானா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வேலையின்மையை ஆளும் மாநில பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்போர்ட்டில் லக்கேஜ் தள்ளும் வேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.













