பெண்களின் பாதுகாப்புக்காக சென்னையில் இளம்சிவப்பு நிற ஆட்டோக்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் 250 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களை மானிய விலையில் பெண்களுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் சமூகநலத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது’ சென்னை மாநகரத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்பாக பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கு உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருக்கின்றது.
மேலும் போலீஸ்துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் இந்த ஆட்டோக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோ மொத்த விலையில் ஒரு லட்சம் ரூபாய் என்று அரசால் மானியம் வழங்கப்படுகின்றது. கடன் உதவியாக தேசிய மயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அதற்கான பணிகளை சமூக நலத்துறை தீவிரமாக செய்து வருகின்றது. இந்த திட்டத்தில் பெண்களை குறிப்பாக கணவனை இழந்த பெண்களை இணைத்து அவர்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.