தமிழ்நாட்டில் மது அருந்தும் நபர்கள் செய்யும் ஒரு காரியம் பொது இடத்தில் உட்கார்ந்து மது அருந்துவது. இது போல தவறான காரியத்தை தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் உள்ள குடிமகன்கள் கொஞ்சம் கூட நாகரீகமின்றி செய்து வருகின்றனர்.
பல வயல்வெளிகள், மார்க்கெட் அருகில் உள்ள குட்டிசந்துகள், கோவில்கள் அருகில், டாஸ்மாக் அருகில் உள்ள வயல்வெளிகள், ஏரிக்கரைகள், காடுகள் என இந்த மதுகுடிப்பவர்கள் குடித்து விட்டு ரகளை செய்வதும் வெட்டவெளியில் உட்கார்ந்து மது அருந்துவதும் தொடர்ந்து வருகிறது.
இதனால் அமைதியானவர்கள், பெண்கள், குழந்தைகள் முக்கியமான இடங்களுக்கு செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், சேலம் மாநகர காவல்துறை சார்பில் டாஸ்மாக் கடை அருகில், ’பொது இடங்களில் மதுஅருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்’ என எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொது இடங்களில் மதுஅருந்துவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, டாஸ்மாக் கடை அருகில் உள்ள திறந்தவெளிகளில் மது அருந்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களில் சிலர் கூறும்போது, “மாநகர போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கையால், டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகளை அச்சமின்றி கடந்து செல்ல முடிகிறது. இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மாவட்டம் முழுவதும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும்” என்று கூறுகின்றனர்.

