ஜேம்ஸ் பாண்ட் என்றால் துப்பாக்கி, கார்கள், ஆபத்தான மிஷன்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் நிஜ வாழ்க்கையின் சிறந்த உளவு அதிகாரி, தன் பெயர் வெளியில் தெரியாமல் மிஷனை முடிப்பவர். அப்படிப்பட்ட இந்திய உளவுத் துறையின் பிதாமகன் தான் ரமேஷ்வர் நாத் காவ் (Rameshwar Nath Kao). ‘ரா’ (R&AW) அமைப்பை உருவாக்கிய இந்த ‘ஜென்டில்மேன் ஸ்பை’-யின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு தற்போது பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிறது.
கரண் ஜோஹரின் ‘தர்மா புரோடக்ஷன்ஸ்’ மற்றும் ‘லியோ மீடியா கலெக்டிவ்’ இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. பத்திரிகையாளர் நிதின் கோகலே எழுதிய ‘R.N. Kao: Gentleman Spymaster’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படம், 2028 ஆகஸ்ட் 11 அன்று திரைக்கு வருகிறது.
1955-இல் ‘காஷ்மீர் பிரின்சஸ்’ ஏர் இந்தியா விமானம் நடுவானில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டபோது, 37 வயதான காவ் தான் சர்வதேச விசாரணையை நடத்தினார். சீனா, ஹாங்காங் வரை சென்ற இந்த வழக்கு, அவரை உளவு உலகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 1968-இல் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் பிரத்யேக வெளிநாட்டு உளவு அமைப்பான ‘ரா’-வை உருவாக்கும் பொறுப்பை காவிடம் ஒப்படைக்க, அவர் அதன் முதல் தலைவரானார்.
1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் ரசியத் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து, இந்திய வான்படையை எச்சரித்தது காவ் அமைத்த உளவு வலைப்பின்னல் தான். இதுவே பங்களாதேஷ் உருவாக முக்கியக் காரணமாக அமைந்தது. ‘ராம்ஜி காவ்’ என்று அழைக்கப்பட்ட இவர், இவ்வளவு பெரிய வரலாற்றுச் சாதனைகளுக்குப் பிறகும் புகழை விரும்பாமல் நிழலிலேயே வாழ விரும்பினார். திரைக்குப் பின்னால் இருந்து உலக வரைபடத்தையே மாற்றியமைத்த ஒரு நிஜ நாயகனின் கதையைத் திரையில் காண சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













