தமிழ் திரையுலக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத காவியத் திரைப்படங்களில் ஒன்றான ‘படையப்பா’ வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும், அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமா ர் ‘படையப்பா 2’ படத்தின் கதைக்களம் மற்றும் அது தொடர்பான ரஜினிகாந்தின் ஆலோசனைகள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தனது உதவி இயக்குநர்கள் குழுவுடன் சேர்ந்து 10 முதல் 15 நாட்கள் தீவிரமாக உழைத்து ‘படையப்பா 2’ படத்தின் முதற்கட்ட திரைக்கதையை தயார் செய்துள்ளார். இக்கதை முற்றிலும் ஒரு வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் (Horror Subject) பாணியில் அமைக்கப்பட்டிருந்தது. அதாவது, ‘படையப்பா’ படத்தின் இறுதியில் இறந்துபோகும் நீலாம்பரி கதாபாத்திரம், மீண்டும் மறுபிறவி எடுத்து வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பழிவாங்கத் துடிப்பது போலவும், அதன் பின் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களையே கதையாகவும் வடிவமைத்திருந்தனர். இந்தக் கதையைக் கேட்ட ரஜினிகாந்தும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
இதனிடையே, ‘படையப்பா’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி (Re-release) மாபெரும் வசூல் சாதனை படைத்தது. முதன்முறையாக வெளியானபோது கிடைத்த வசூலை விட இரட்டிப்பு வசூலை ரீ-ரிலீஸின் போது இப்படம் ஈட்டியது. குறிப்பாக, தற்போதைய இளம் தலைமுறை (Gen Z) மற்றும் இளைஞர்கள் திரையரங்குகளில் இப்படத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதைக் கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம், “இன்றைய தலைமுறை இளைஞர்கள் இப்படத்தை இந்த அளவுக்கு ரசித்துக்கொண்டாடுகிறார்கள். அதனால் நாம் எழுதிய திரைக்கதை மட்டும் போதாது. தற்போதைய டிரெண்டிற்கு ஏற்ப இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இன்னும் யோசித்து, திரைக்கதையை மேலும் மேம்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது ரஜினிகாந்த் தனது பிற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். “இறைவனின் அருளால் எதிர்காலத்தில் ‘படையப்பா 2’ நிச்சயம் சாத்தியமாகலாம்” என்று கே.எஸ்.ரவிகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.













