கர்நாடகாவில் கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்கள் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை செல்ஃபி எடுத்து அனுப்பவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11000 ஐ நெருங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்கள் நாடு முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒழுங்காக இருப்பதில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையடுத்து கர்நாடக அரசு வீட்டுக்குள்ளேயே இருக்க வைப்பதற்காக ஒரு செயலியை உருவாக்கி உள்ளது. அதன்படி ஒவ்வொரு மணிநேரமும் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் செல்பி எடுத்து அதை அந்த செயலியில் பதிவேற்ற வேண்டும். அந்த செயலியில் ஜிபிஎஸ் வசதி இருப்பதால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இருப்பிடத்தை அது கண்டுபிடித்துக்கொள்ளும். இதனால் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்தால் கண்டுபிடித்துவிடலாம். தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் இதுபோல செல்பி எடுத்து அனுப்பவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







