கொரோனா பீதியைக் காரணம் காட்டி அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக விற்கப்படுவதாக நடிகர் பாலசரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் வளரும் நகைச்சுவை நடிகராக உருவாகி வருபவர் பாலசரவணன். பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு அதில் ஆதங்கமாகப் பேசியிருந்தார்.
அந்த வீடியோவில் ‘மூன்று நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் ஹேண்ட் சானிட்டைசர் தீர்ந்து விட்டதால் ,வாங்க கடைக்குப் போயிருந்தேன். அங்கு 60 ரூபாய் விலையுள்ள சானிட்டைசரை 135 ரூபாய் என்று விற்கிறார்கள். அது குறித்து பில் போடுபவரிடம் கேட்டதற்கு ‘நான் என்ன செய்ய முடியும். நான் இங்கே வேலைதான் பார்க்கிறேன்’ என்று கூறினார். மற்றொரு சம்பவமாக இன்று காபி குடிக்கும் கடைக்கு சென்ற போதும் அங்கு வேலை செய்யும் அக்காவும் இதே போல அதிக விலைக்கு சானிட்டைசர் வாங்கியதாக சொல்லி புலம்பினார்.
இந்த மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, சானிட்டைசர்களை இரு மடங்கு மூன்று மடங்கு என விலையேற்றி விற்கின்றனர். ஆபத்துக் காலங்களில்தான் பெரிய நிறுவனங்கள் சானிட்டைசர்களை தள்ளுபடி விலையில் தந்து மக்களை ஊக்குவிக்க வேண்டும். கொரோனாவை விட கொடூரமானவன் மனிதன். இந்த ஊரில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சாதி ஒழியாது, ஏற்றத் தாழ்வு மாறாது, எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஒரு ஆணியும் புடுங்க முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

