கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து பலரும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வருகின்றது. சிறு ஓடையாக இருந்தது தற்போது பெரிய ஆறு போல் காட்சி அளிக்கின்றது. அங்கிருந்த குடியிருப்பு வாசிகளின் நிலைமை என்ன என்பதே தெரியவில்லை. தற்போது வரை கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. பல பகுதிகள் தீவு போல் காட்சியளிக்கின்றன.
தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு படையினர், மீட்பு பணி வேலைகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார்கள். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு கேரள மாநில அரசு பொதுமக்களிடம் நன்கொடை கேட்டு வருகின்றது. அந்த வகையில் பல பிரபலங்கள் தொடர்ந்து கேரள மாநிலத்திற்கு உதவி செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக நடிகர் சியான் விக்ரம் நேற்று 20 லட்சம் கொடுத்து உதவி செய்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்திக் மூவரும் இணைந்து 50 லட்சம் ரூபாயை கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்கள்.







