சமூக வலைதளங்களில் செஸ் விளையாட்டை நகைச்சுவை மற்றும் சுவாரசியமான ரீல்ஸ் மூலம் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பிரபலமானவர் ‘கூஃபி ஜென்’ (GoofyGen) என அழைக்கப்படும் சுதர்ஷன் அசோகன். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இவர், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் திரையுலக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரசியமான மீம் எடிட்கள், நடன வீடியோக்கள் மற்றும் செஸ் தொடர்பான கன்டென்ட் மூலம் குறுகிய காலத்தில் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுதர்ஷன் அசோகன். ஏற்கெனவே உலக செஸ் சாம்பியன் டி. குகேஷ் முதல் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுடன் இணைந்து இவர் வெளியிட்ட செஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
View this post on Instagram
இந்நிலையில், செஸ் போர்டிலிருந்து நேரடியாக சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் வகையில், ‘கூஃபி ஜென்’ ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டிஜிட்டல் உலகில் இளைஞர்களிடையே இருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, பெரிய திரையிலும் அவருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வந்துள்ளன.
சமீபகாலமாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பலர் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாகக் களமிறங்கி வெற்றி பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் ‘கூஃபி ஜென்’ இணைந்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தலைப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













