தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. பிரவீன் எஸ் விஜய் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் (Drumsticks Productions) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குடும்ப உறவுகளின் உணர்வுப்பூர்வமான பின்னணியையும், விறுவிறுப்பான நீதிமன்ற வாதங்களையும் (Family + Courtroom Drama) சமவிகிதத்தில் கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதை டிரைலர் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இடையேயான நடிப்புப் பரிமாணமும், உணர்வுபூர்வமான வசனங்களும் டிரைலருக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருப்பது காட்சிகளின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘சத்தியவான் சாவித்திரி’ பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ மற்றும் மம்மூட்டியின் ‘ஓம்’ ஆகிய படங்களும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த கோர்ட்ரூம் என்டர்டெயினர் குடும்ப ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













