அதிமுக ஒன்றுபடாமல் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ‘பத்திரிகை உலகில் அடித்தட்டு மக்கள் வரை சுலபமாக தமிழில் படிக்க ஆதித்தனார் ஆற்றிய பணி இன்றும் கிராமப்புறங்களில் பாமர மக்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.
அவர் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும். அதிமுகவில் பிரிந்து இருக்கக்கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள் தான். தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வாங்கி ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோனது. 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
பிற பாராளுமன்ற தொகுதிகளிலும் பின்னடைவு தான் ஏற்பட்டு இருக்கின்றது. ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லை. தொகுதியில் இருக்கக்கூடிய தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான் இதற்கு காரணம். தொண்டர்கள் ஒன்று சேர்ந்து அதிமுக எம் ஜி ஆர், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டபோது என்னுடன் ஆறு பன்னீர்செல்வம் நின்றார்கள். இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து, தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுயட்சையாக நின்ற நான் 33 சதவீத வாக்குகள் பெற்று இருக்கின்றேன். தொண்டர்களும் பொதுமக்களும் என் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இதுவே காட்டுகின்றது” என்று கூறி இருக்கின்றார்.













