tamilnadu

சூரிய மின் உற்பத்தி… புதிய உச்சத்தை தொட்ட தமிழகம்… வெளியான அறிக்கை…!

Published on

தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மின்சார வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

கோடை காலங்களில் மின் நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இதற்கு தேவையான மின்சாரத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல வழிகளில் உற்பத்தி செய்து கொள்முதல் செய்து வருகின்றது. இதனால் தான் தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் நீடித்து வருகின்றது. வழக்கமான மின் உற்பத்தி ஆதாரங்கள் தவிர மாசு ஏற்படாத காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்திக்கு தமிழகம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

தமிழகத்தில் 10,000 மேற்பட்ட காற்றாலைகள் மூலம் சீசன் காலங்களில் 4500 மெகா வாட்டுக்கும் அதிகமான மின்சாரம் பெறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக தனியார் காற்றாலைகள் மூலம் சீசன் காலங்களில் மின் உற்பத்தி அதிகம் செய்யப்பட்டு வருகின்றது. காற்றாலை மின் உற்பத்தியை தொடர்ந்து சூரிய மின் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதற்காக சோலார் பேனல்கள் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் அமைக்கப்பட்டு வருகின்றது. தனியார் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு அதிக ஊக்கம் அளிக்கப்படுகின்றது. இதனால் தமிழகத்தில் 8900 மெகாவாட் அளவிற்கு சோலார் மின் உற்பத்தி தயாரிக்கும் பேனல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது .

இதன் மூலமாக சூரியன் உற்பத்தி அளவு நாளுக்கு நாள் அதிகரித்து புதிய இலக்கை எட்டி வருகின்றன. கடந்த 2-ம் தேதி 5,704 மெகாவாட் மின் உற்பத்தி என்பது அதிகபட்ச சாதனையாக இருந்தது. இது வரும் கடந்த 9-ம் தேதி 5,979 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version