Latest News
முடிந்தால் கைது செய்யுங்கள்…சவால் விட்ட சீமான்…
நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், யூ-டியூபருமான ‘சாட்டை’துரைமுருகன் தொடர்ந்து ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும், அந்த கட்சியையும் எதிர்த்து வருகிறார். மேடைகளில் பேசும் போது அதிகமாக இவர்களை பற்றியே பேசி வருகிறார். இந்நிலையில் இன்று ‘சாட்டை’துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று காலை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசை கடுமையாக சாடினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து பாடலை பாடியிருந்திருக்கிறார் ‘சாட்டை’ துரை முருகன்.
பாடலில் கருணாநிதியை பற்றி அவதூராக குறிப்பிட்டதாக ‘சாட்டை’துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இது குறித்து பேசிய சீமான் யாரோ ஒருவர் எழுதிய பாடலை, யாரோ ஒருவர் பாடிய பாடலை தான் துரை முருகன் திரும்பப் பாடியுள்ளார். இந்த கைது நடவடிக்கை முற்றிலும் தவறானதாக சொல்லியிருந்தார் சீமான்.
பேட்டியின் நடுவே கைது செய்யப்பட காரணமாக இருந்த பாடலை சீமான் பாடி முடிந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்றார். அதோடு தன்னை கைது செய்ய முடியுமா? என அரசுக்கு சவால் விட்டார்.
தமிழகத்தில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் அவசர அவசரமாக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர் என அரசை குற்றம் சாட்டி கேள்விகளையும் எழுப்பியுள்ளார் சீமான்.