வேலை நேரம் முடிந்த பிறகு நிறுவனத்தின் அழைப்புகளை நிராகரிப்பதற்கு தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது என்று புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பின் வீட்டிற்கு சென்ற பிறகு சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவலை கேட்பது வழக்கம்.
இந்த சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்குவதற்கு நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்ற பிறகும் அலுவலகங்களை பற்றி சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
வேலையில்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை கழிக்கவோ அல்லது குடும்பத்தினரிடம் நேரம் செலவிடுவது அவர்களுக்கு முடியாத ஒன்றாக மாறுகின்றது. இந்த குறையை போக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையில் பிரான்ஸ், பெயின், பெல்ஜியம் ஆகி ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது வேலை நேரம் முடிந்த பின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அந்த அழைப்புகளை துண்டிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு இருக்கின்றது என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் தற்போது இணைந்துள்ளது. தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்த பின் நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்பு மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது.
ஆஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த புதிய சட்ட திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அலுவலக நேரத்திற்கு பிறகு தொழிலாளர்களை தொடர்பு கொள்ளும் போது நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம்.
நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு முடிவெடுக்கலாம் என்று பசுமை கட்சி முன்மொழிந்து இருக்கின்றது. மேலும் இந்த உரிமை சட்டம் வருகிற 26 முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்று ஆஸ்திரேலியா அறிவித்திருக்கின்றது.







