தமிழ் சினிமாவில் புது கான்செப்ட்!
அடடா… தமிழ் சினிமாவில் ‘காதல்’ கதைக்குப் பஞ்சமே இல்லை. ஆனா, இயக்குநர் ஜி.வி. பெருமாள் (அவரே இயக்கி, தயாரித்து, நடித்தும் இருக்காரு!) இந்த முறை கையில எடுத்திருக்கும் கதைக்கரு ரொம்பவே அனலான விஷயம்!
‘சரீரம்’ படத்தின் டைட்டிலைப் பார்த்ததுமே, ஏதோ புதுசா இருக்கப் போகுதுன்னு மனசு சொல்லுச்சு. படத்தைப் பார்த்து முடிச்சப்போ, “வித்தியாசமான சிந்தனைதான், ஆனா இது விபரீதமான அணுகுமுறையாச்சே!”ன்னு ஒரு கலவையான உணர்வு மனசுல ஓடுச்சு. இந்தக் காலத்துப் பசங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கன்னு நமக்கு ஒரு ஷாக் கொடுக்குது இந்தப் படம்.
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். கல்லூரிக் காதலர்களான தர்ஷன் ப்ரியன் மற்றும் சர்மி விஜயலட்சுமி. இவங்களோட காதலுக்கு வழக்கம் போல நாயகியின் குடும்பத்துல கடும் எதிர்ப்பு. குறிப்பா, பணத்துக்காக சர்மியை தன் அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுக்கணும்னு அவ மாமன் (வில்லன்) வெறித்தனமா அலையுறான். காதலர்களைக் கொலை செய்யறதுக்கு வரைக்கும் முயற்சி நடக்குது.
இந்த சூழ்நிலையில, ‘ஒண்ணு சேர முடியலன்னா செத்துப் போயிடலாம்’னு சாதாரண முடிவெடுக்காம, “சாகறதை விட வாழணும்”னு யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்குறாங்க.

அது என்னன்னா… தங்களோட பாலினத்தையே மாத்திக்கிறது! ஆச்சரியமா இருக்கா? தர்ஷன் பெண்ணாகவும், சர்மி ஆணாகவும் அறுவை சிகிச்சை செஞ்சுக்க முடிவெடுக்குறாங்க. இதன் பிறகு அவங்க வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் வருது? இந்த முடிவு அவங்க காதலை காப்பாத்துச்சா? இல்லை, வாழ்க்கையையே சிக்கலாக்குச்சா? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் ஹீரோவா நடிச்சிருக்கிற தர்ஷன் ப்ரியன், ஆக்ஷன், டான்ஸ், சென்டிமென்ட்னு எல்லா ஏரியாவிலும் நல்லாவே ஸ்கோர் பண்ணியிருக்காரு. காதலுக்காக தன் ‘சரீரத்தை’யே மாத்த முன்வரும் இடத்தில் அவருடைய நடிப்பு ரொம்பவே கவனத்தை ஈர்க்குது. நாயகி சர்மி விஜயலட்சுமி, அழுத்தமான கேரக்டரை எளிமையான அழகோட கொடுத்திருக்காங்க. குறிப்பா, பாலினம் மாறிய பிறகு அவங்க எதிர்கொள்ளும் வலிகளைக் காட்டும் காட்சிகள் நம் மனதைக் கனமாக்குகின்றன. ஷகீலா டாக்டர் கேரக்டரில் குறைவில்லா நடிப்பை கொடுத்திருக்காங்க.
இசையமைப்பாளர் வி.டி.பாரதிராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம். பின்னணி இசையும் கதைக்குத் தேவைப்படும் எமோஷனைக் கொடுத்திருக்கு.
ஆனா, ஒரு சின்ன இடி. இயக்குநர் எடுத்திருக்கும் கதைக்கரு மிகவும் புதுசு. பாராட்டக்கூடிய ஒரு துணிச்சலான முயற்சிதான். ஆனால், ஒரு விபரீதமான முடிவை லாஜிக் மீறாமல், ஆழமான காரண-காரியங்களுடன் சொல்லியிருந்தால், அது இன்னமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். சில இடங்களில் கதை, லாஜிக்கை விட்டு விலகி, ‘சினிமாத்தனமா’ போகுதோன்னு ஒரு ஃபீலிங் வருது. அதே சமயம், திருநங்கைகளின் வலிகள் குறித்தும், இந்தப் பாலின மாற்றத்தின் விளைவுகள் பற்றியும் படத்தில் அழுத்தமாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.
காதலுக்காக உயிரை விடுறதெல்லாம் பழைய கதை. காதலுக்காக தன் ‘சரீரத்தையே‘ மாற்றத் துணியும் காதலர்களின் விபரீத முயற்சிதான் இந்த ‘சரீரம்’. ஒருமுறையாவது பார்க்கலாம்.