கூத்துப்பட்டறை மூலம் திரையுலகில் நுழைந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல் (Vimal). பூபதி பாண்டியன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘மன்னர் வகையரா’ திரைப்படத்தில் நாயகமாக நடித்ததோடு, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஏ3வி சினிமாஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படம் வெற்றி பெற்றாலும், அதன் தயாரிப்பு மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளும் புகார்களும் விமலைச் சுற்றியே வந்தன.
குறிப்பாக, இப்படத்தின் தயாரிப்புக்காகப் பினான்சியர் கோபியிடம் இருந்து நான்கரை கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டதாகவும், படம் வெளியாகி பல வருடங்களாகியும் அந்தத் தொகை திரும்பச் செலுத்தப்படவில்லை எனவும் புகார் எழுந்தது. விமல் வழங்கிய காசோலையை (Cheque) வங்கியில் செலுத்தியபோது கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியதை அடுத்து, பினான்சியர் கோபி சென்னை 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விமலுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வாங்கிய தொகையைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும், நடிகர் விமலுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் அதிரடியாக உத்தரவிட்டார். இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் விமல் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்திற்குத் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.













