சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த முடிவு என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்போது நடந்து கொண்டிருக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்லன. இந்நிலையில் வீட்டுக்குள் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்காக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் கிரிக்கெட் வீரர்களை நேர்காணல் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் கேப்டன் கோலியை அவர் இன்ஸ்டாகிராமில் பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் கோலியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்ட அவர் கோலி சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறியது ஏன் எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த கோலி ‘எனது உடம்பில் அதிகளவு யூரிக் அமிலம் சுரந்தது. அது கால்சியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால் எனக்கு எலும்புகளில் வலி ஏற்பட்டது. ஒரு நாள் முழுவதும் கழுத்து வலியால் அவதிப்பட்டு தூங்க முடியாமல் தவித்தேன். பின்னர் தான் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறினேன். என் வாழக்கையில் எடுத்த சிறந்த முடிவாக இதை நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியாக எழுகிறேன். ஒரு போட்டியின் சோர்வில் இருந்து விரைவாக மீள முடிகிறது. டெஸ்ட் போட்டியின் சோர்வில் இருந்து ஒரே நாளில் என்னால் மீள முடியும்.’ எனக் கூறியுள்ளார்.







