தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் தனது அதிரடி நடிப்பாலும் தேசபக்திப் படங்களாலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் சர்ஜா (Arjun Sarja). தற்போது அவர் கதாநாயகனாக நடிப்பதுடன், தானே இயக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா (Pan-India) தேசபக்தித் திரைப்படம் ஒன்றை தொடங்கவுள்ளார்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை, வருகிற நவம்பர் 27-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும், அதே நாளில் இப்படத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பும் (Title) வெளியிடப்பட உள்ளது.
வீரம், தியாகம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா அளவில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன், பல்வேறு பிராந்திய மொழித் திரையுலகின் பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைய உள்ளனர்.
இப்படத்திற்கு மேஜர் விஜய் பார்கவன் (Major Vijay Bhargavan) கதை மற்றும் திரைக்கதை எழுத, அனுப் மோகன் (Anoop Mohan) இப்படத்தைத் தயாரிக்கிறார். அயோத்தியில் மங்களகரமான தொடக்கத்துடன் இந்தியத் திரையுலகில் ஒரு பிரம்மாண்டப் பயணத்தைத் தொடங்கவுள்ள இப்படம் குறித்த கூடுதல் சுவாரசியத் தகவல்கள் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













