‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கில்லாடி. அந்த வகையில், ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற தரமான படங்களைக் கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எம். மணிகண்டனுடன் விஜய்சேதுபதி மூன்றாவது முறையாகக் கைகோர்த்துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ (Muthu Engira Kaattaan) தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த முறை ஒரு டார்க் ஹியூமர் கலந்த ஆக்ஷன் திரில்லர் தொடருடன் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் களமிறங்குகின்றனர்.
இத்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஒரு வெட்டுப்பட்ட தலை (விஜய்சேதுபதி), சிரித்துக்கொண்டே பேசும் காட்சிகள் மற்றும் அந்தத் தலையைத் தேடி நடக்கும் போலீஸ் விசாரணை என மிகவும் வினோதமான மற்றும் சுவாரஸ்யமான பின்னணியில் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. “எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்தாலும் காட்டானை உங்களால பிடிக்க முடியுமா?” என விஜய்சேதுபதி கேட்கும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது. இத்தொடரில் ‘காட்டான்’ கதாபாத்திரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள்; சிலர் அவரை ஒரு அரக்கனாகவும், சிலர் ஒரு அதிசயமாகவும் கருதுகின்றனர். இந்த மர்மங்களை அவிழ்க்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இந்த வெப் சீரிஸை மணிகண்டனுடன் இணைந்து பி. அஜித்குமார் இயக்கியுள்ளார். விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனமே இத்தொடரைத் தயாரித்துள்ளது. இதில் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன், வி.ஜே. பார்வதி மற்றும் ரிஷா ஜேக்கப்ஸ் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘பிரேமம்’ பட புகழ் ராஜேஷ் முருகேசன் இத்தொடருக்கு இசையமைத்துள்ளார். மணிகண்டனின் எதார்த்தமான மேக்கிங் மற்றும் விஜய்சேதுபதியின் மிரட்டலான நடிப்பு என இத்தொடர் ஓடிடி தளத்தில் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘முத்து என்கிற காட்டான்’ தொடர் வரும் மார்ச் 27, 2026 அன்று ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாகத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் சீரிஸ், ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.













