தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி உயிர்ப்பலி ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்த நிலையில்
தமிழகத்தில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் பொழுது, அங்கு பணி செய்யும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பெப்சி அமைப்பு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அந்தவகையில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உடல் உபாதைகளால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதற்கான உரிய கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







