தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது – உலகம்மை தம்பதியர். தெய்வபக்தி மிக்கவர்கள், ஏழைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தனர் இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் ராமேஸ்வரம் சென்று ராமநாதஸ்வாமியை வேண்டியதால் இவர்களுக்கு சிதம்பர ஸ்வாமிகள் மகனாக பிறந்தார்.
சிறுவயதில் 3ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஸ்வாமிகள் மலைகளில் ஆடுகள் மேய்த்து வந்தார் அப்போது முதலே எல்லா ஜீவராசிகள் மீதும் இரக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார். மலையில் தோன்றிய ஒரு சித்தரிடம் அருளாசி பெற்றார்.
தனக்கு திருமணம் சரிவராது துறவறம்ம்தான் சரி என்று இவர் நினைத்த நிலையில் காலச்சூழ்நிலையால் திருமண பந்தத்தில் தள்ளப்பட்டார். இருப்பினும் இது சரி வராது என திருமணத்தன்றே மனைவியை பிரிந்தார் துறவறம் ஏற்றார் . ஊரெங்கும் யாசகம் கேட்டு சாப்பிட்டு வந்தார் .தனது கணவர் பிரிந்ததை அடுத்து மனைவியும் கணவனை தெய்வமாக போற்றிய அவரது துணைவியார், கணவன் ஈடுபட்டிருந்த ஆன்மிகப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். சுவாமி ஏற்படுத்திய சமூகப் பணியிலும் சிறந்து விளங்கினார்.
சதுரகிரி மலை மீது இருந்த ஒரு ஒற்றைக்கொம்பு யானையிடம் மிகுந்த பாசத்துடன் இருந்தார் அந்த யானை இறந்த பிறகு அதன் சிரசை, சட்டபடி வாங்கி பாறைக்காட்டில் உள்ள தனது தியானமடத்தில் தீபம் போட்டு வணங்க வைத்துள்ளார்.
இவர் யாசகம் எடுத்து சாப்பிடுவது பிடிக்காத இவரது உறவினர்கள் இவரை கொல்ல வந்துள்ளனர் அந்த நேரத்தில் இவர் நவகண்டம் மூலம் தனது உடலை கூறு கூறாக போட்டு காண்பித்துள்ளார் அதை பார்த்த உறவினர்கள் சாமியை யாரோ ஏற்கனவே கொன்று விட்டனர் என பயந்து ஓடிவிட்டனராம். அடுத்த நாள் இயல்பு நிலையில் இருந்த ஸ்வாமியை பார்த்து பயத்தில் உறைந்து விட்டனராம்.
இப்படி பற்பல அற்புதங்களை நிகழ்த்திய ஸ்வாமிகள் கடந்த 1981ம் ஆண்டு வைகாசி மாதம் ஜீவசமாதியடைந்தார் இவர் ஜீவசமாதி வல்லநாடு அருகேயுள்ள பாறைக்காட்டில் உள்ளது.
இங்கு வந்து வழிபட்டால் அனைத்தும் சிறக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கடுமையான உடல் நோய்களால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து தினம் தோறும் நடக்கும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டால் உடல் பிணி குணமடையும் என்பது நம்பிக்கை .
ஏர்வாடியைச் சேர்ந்த முகமதியப் பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சுவாமி அந்த பெண்ணின் வயிற்று வலியை போக்க அன்னதானத்தில் வந்து உணவு உண்ண கூறினார். அதுவரை சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு, தீராத நோயாக இருந்த அந்நோய் தீர்ந்தது. தற்போதும் கூட வல்லநாட்டு சித்தர் பீடத்திற்கு வந்து சுவாமியை வணங்கி விட்டு அன்னதானம் சாப்பிட்டால் பலதரப்பட்ட நோய்களும் தீருகிறது. இந்த சித்தர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.







