ஒரு படம் இயக்க வேண்டும் என்பது பெரும்பாலான சினிமா அபிமானிகளின் விருப்பம். எல்லோருக்கும் அந்த விருப்பம் நிறைவேறுவதில்லை, எல்லோரும் ஒரு படத்தை பார்த்து பரவசப்பட்டு அதோடு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள், ஒரு சிலரே படமெடுக்க வேண்டும் என தலைநகரை நோக்கி படையெடுப்பார்கள். அப்படி இயக்குனராக ஜெயிக்க செல்பவர்களும் உடனடியாக படம் இயக்க வாய்ப்பு வந்து விடாது, படம் எடுப்பது என்பது கோடிகளில் இருக்கிறது, எந்த தயாரிப்பாளரும் தயாரிப்பு நிறுவனமும் அத்தகைய வாய்ப்புகளை உங்களுக்கு தந்துவிடாது ஆனால் அப்படி வாய்ப்பு கிடைத்து தன் பெற்றோருக்கு அந்த படத்தை காண்பித்துவிட வேண்டும் என முயற்சி செய்து கடைசியில் தனது தந்தைக்கு தான் இயக்குனரானதை தெரிவிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டவர்தான் இயக்குனர் சுசி கணேசன்.
இந்த படத்தில் தான் சினேகா அறிமுகமானார் என்றாலும் இதற்கு பின் நடித்த ஆனந்தம், என்னவளே இது போல் சினேகா நடித்த படங்கள் இதற்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது.
இந்த படத்தை தயாரித்த நிறுவனம் பல்வேறு காரணங்களால் படத்தை வெளியிடாமல் வைத்திருக்க, தனது முதல் படம் என கனவோடு இருந்த இயக்குனர் சுசி கணேசன், முதல் படத்தை இப்படி முடக்குகிறார்களே என அந்த நாட்களில் வாரம் ஒரு இதழுக்கு பேட்டி கொடுத்திருப்பார், கடைசியில் அவரின் அப்பாவுக்கு படத்தை காட்ட வேண்டும், தான் ஜெயித்ததை நிருபிக்க வேண்டும் என நினைத்து அது முடியாமல் போனது, தனது தந்தை இறந்த பின் மொட்டை போட்ட தலையோடு குமுதம் இதழுக்கு விரும்புகிறேன் படம் இன்னும் வெளிவரலைங்க என மிக மிக கடுமையான சோகத்துடன் பேட்டி கொடுத்திருந்தார். பல கட்ட போராட்டத்துக்கு பின் இப்படம் 2002 ல் வெளிவந்தது. ஒரு படைப்பாளி வெளியில் தெரிவதற்கு எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கிறது பாருங்கள்.







