வாரிசு அரசியல் எல்லாம் இல்லை- வைகோ மகன் துரை வையாபுரி

வாரிசு அரசியல் எல்லாம் இல்லை- வைகோ மகன் துரை வையாபுரி

மதிமுக தலைமை கழகச் செயலாளராக  அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நேற்று நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அவர் கூறியதாவது

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். கட்சியினரிடம் நடத்திய ரகசிய வாக்கெடுப்பில் 106 பேரில் 104 பேர், நான் வரவேண்டும் என்றும், 2 பேர் வரவேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். ஏன் எனக்கு வாக்களிக்கவில்லை என்று அவர்கள் வருத்தப்படும் அளவுக்கு எனது செயல்பாடு இருக்கும்.

இது நியமன பொறுப்பு இல்லை. கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். வாரிசு அரசியல் என்று களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கணிசமான எதிர்ப்பு இருந்தால் வரமாட்டேன் என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். கடந்த பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நிற்க என்னை வற்புறுத்தியபோதும் வைகோ அதை மறுத்துவிட்டார்.

நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையை பூர்த்திசெய்யும் வகையில் எனது நடவடிக்கை அமையும். மலையை தூக்கி எனது தோளில் சுமத்தியது போல் தெரிகிறது. சவால் நிறைந்த பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. என்னால் முடிந்த அளவுக்கு உழைக்கத் தயார். மதிமுகவுக்கு உள்ள 6 விழுக்காடு வாக்கு வங்கியை உயர்த்த அனைவரும் உழைக்க வேண்டும்.பேரவை, மக்களவைத் தேர்தல்களில் நிற்க வாய்ப்பு கிடைத்தால் நிற்பேன்.

இவ்வாறு துரை வையாபுரி வைகோ கூறியுள்ளார்.