OG Movie - PawanKalyan

டோலிவுட்டின் ஜப்பான் வேட்டை: பவன் கல்யாண் ‘ஓஜி’ (OG )-யில் சிவந்த ஜப்பானிய ‘யாக்கூஸா’ ரகசியம்!

தென்னிந்திய சினிமா தற்போதுள்ள பவுண்டரிகளைத் தாண்டி, சர்வதேச அரங்கில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியும், பின்னர் ‘ஆர் .ஆர் .ஆர் ‘, ‘கல்கி’ போன்ற மாஸ் ஹீரோ படங்களின் எழுச்சியும், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் தெலுங்கு சினிமாவுக்கு (டோலிவுட்) ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளன.

இந்த வரவேற்பின் உச்சமாக, இப்போது பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து, அதிரடி ஆக்க்ஷன் திரைப்படமான ‘ஓஜி’  (OG – They Call Him OG), ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் சுஜீத் இயக்கிய இப்படத்தின் பிரதான கதைக்களம், ஜப்பானிய கலாச்சாரத்தையும், அவர்களது யாக்கூஸா’ (Yakuza) எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் பின்னணியையும் தொட்டுச் செல்கிறது என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

‘ஓஜி’ (OG) படக்காட்சிகளில், பவன் கல்யாணின் கதாபாத்திரம் ஜப்பானிய சமுராய் பள்ளி ஒன்றில் அநாதையாக வளர்க்கப்பட்டதாகக் காட்டப்படுகிறது. அந்தப் பள்ளியை யாக்கூஸா குழுவினர் அழித்த பிறகு, உயிர்பிழைத்த ஒரே மாணவராக அவர் இந்தியாவுக்குத் திரும்புகிறார். இந்த ஆழமான பின்னணி, படத்தின் கதாநாயகனுக்கு ஒரு தனித்துவமான ‘ஆரா’வை (Aura) கொடுத்துள்ளது.

OG Movie

மேலும், பவன் கல்யாண் இந்தப் பாத்திரத்திற்காக ஜப்பானிய மொழியைக் கற்று, அதில் வசனங்களும் பேசுகிறார் என்று கூறப்படுகிறது. “Washi Yo Washi” (வாஷி யோ வாஷி) என்ற ஒரு மிரட்டலான ஜப்பானிய ஹைகூ (Haiku – சிறு கவிதை)வை அவர் எதிரியிடம் சொல்லும் காட்சி, ஜப்பானிய சினிமா ரசிகர்களை நேரடியாக ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. கையில் பாரம்பரிய ஜப்பானிய கட்டானா வாளுடன் அவர் நிற்கும் தோற்றம், டோலிவுட் ஹீரோவை சமுராய் போர் வீரராகவே மாற்றியுள்ளது.

டோலிவுட் இயக்குநர்கள் வெறும் சண்டை மற்றும் பிரம்மாண்டம் என்பதிலிருந்து விலகி, உலகளாவிய கலாச்சார அம்சங்களை கதையில் கலப்பது, இந்தியத் திரைப்படங்களுக்கான புதிய வாசல். உதாரணமாக, நடிகர்கள் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த சில திரைப்படங்களும் ஜப்பானியப் பின்னணியுடன் வெளியாக உள்ளன. இது வெறும் வணிக ரீதியான முயற்சி மட்டுமல்ல, வேறு கலாச்சார ரசிகர்களுடனும் உணர்வுபூர்வமாக இணைய ஒரு சினிமா எடுக்கும் புதிய முயற்சி என்றே திரைப்பிரியர்கள் கூறுகின்றனர்.

தெலுங்கு சினிமா இப்போது ஆக்க்ஷன் மட்டுமின்றி, தெலுங்கு நடிகர் “வருண் தேஜ்” நடிக்கும் ஒரு படத்திற்காக இந்திய-கொரியன் பேய் நகைச்சுவைக் (Horror-Comedy) கதைக்களத்தையும் முயற்சி செய்கிறது.

மொத்தத்தில், பவன் கல்யாணின் ‘ஓஜி’(OG) திரைப்படம், தென்னிந்திய சினிமா எல்லைகளைத் தாண்டி, உலகின் எந்தவொரு கலாச்சாரத்துடனும் கலந்து வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்து , ஒரு மைல்கல்லாகவும் இருப்பது என்பதில் சந்தேகமில்லை.