அஜித் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஜி திரைப்படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் லிங்கு சாமி தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான திரைப்படம் ஜி. மிகப்பெரிய ஓபனிங் இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தின் தோல்விக்கானக் காரணத்தை இயக்குனர் லிங்குசாமி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது சம்மந்தமாக சாய் வித் சித்ரா என்ற இணைய சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் ‘முதலில் இந்த கதை மாதவன் அல்லது சித்தார்த்தை வைத்துதான் உருவாக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அது முடியாமல் போகவே அஜித்திடம் சொன்னேன். அவர் ’என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நான் நடிக்கிறேன்’ எனக் கூறினார்.
அப்போதே அவரிடம் நான் கல்லூரி மாணவன் போல எடையை குறைக்கவேண்டும். மற்றும் கிளைமாக்ஸுக்காக ஒரிஜினலாக தாடி வளர்க்கவேண்டும் என கூறினேன். அப்போது கார் பந்தயங்களில் அவர் தீவிரமாக இருந்ததால் இரண்டையும் செய்ய முடியவில்லை. ஆனால் என்னை நம்பி முழுவதுமாக தன்னை ஒப்படைத்தார். அதனால் படத்தின் வெற்றியோ தோல்வியோ அது என்னையே சாரும் என்ற அளவுக்கு என் மேல் நம்பிக்கை வைத்தார். அதற்கு முன்னால் ரன் படத்தின் வெற்றியின் தலைக்கணமோ என்னவோ தெரியவில்லை… நான் கோட்டைவிட்டு விட்டேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.









