இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘வாரணாசி’ (Varanasi). ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உருவாகும் இந்தப் படம் மீது உலகளாவிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தற்போதைய தயாரிப்பு நிலை குறித்து இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வாரணாசி படத்தின் மொத்தப் படப்பிடிப்பில் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இப்படத்திற்கான மிகப்பிரம்மாண்டமான மற்றும் சவாலான அதிரடி சண்டைக்காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். தற்போது சிறிய காட்சிகளும், மற்ற இடைப்பட்ட காட்சிகளும் மும்முரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ‘இன்டியானா ஜோன்ஸ்’ திரைப்பட பாணியில் குழந்தைகளுக்கே உரிய சுவாரஸ்யத்துடனும் குதூகலத்துடனும் இப்படத்தை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாகவும், எனினும் படத்தின் கதையை முன்கூட்டியே அதிகம் வெளிப்படுத்த வேண்டாம் என்பதற்காக அதனை வெளியிடவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். வாரணாசி கதைக்களம் வாரணாசியில் தொடங்கி அண்டார்டிகா, ஆப்பிரிக்கா மற்றும் கடந்த காலமான ரோம் வரை பயணம் செய்து இறுதியாக மீண்டும் வாரணாசியை வந்தடையும் பிரம்மாண்ட உலகளாவிய சாகசத் திரைப்படமாக உருவாகி வருகிறது.













