தமிழ் திரையுலகில் அஜித் நடித்த ‘தீனா’ படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ எனப் பல பான்-இந்திய பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவருக்குத் திரையுலகில் ஒரு மாபெரும் அங்கீகாரத்தையும், கமர்ஷியல் இயக்குநராகப் பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ரமணா’.
நேற்று, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், தனக்குத் திருமண நாள் வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், புதுமணத் தம்பதிகளான முருகதாஸ் மற்றும் அவரது மனைவி ரம்யாவிற்கு அருகில், தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையாகவும், தேமுதிக நிறுவனருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தும் நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றுள்ளது.
‘ரமணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே முருகதாஸ் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்த விஜயகாந்த், அவரது குடும்ப விசேஷத்திலும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். இந்த அரிய புகைப்படத்தைப் பார்த்த கேப்டனின் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள், விஜயகாந்தின் தங்கமான குணத்தையும், திரையுலகினரை அவர் எப்போதும் தன் குடும்பமாக அரவணைத்த பாங்கையும் நினைவுகூர்ந்து எமோஷனலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.













