இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வைத்து நடததப்பட்டது . இதில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகளை நடத்திய வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்க அணிகள் அரை இறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேற்றப்பட்டது. இந்த தொடர் முடிந்த நிலையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி நூற்றி இருபத்தி ஓரு ரன்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முன்னூற்றி எழுபத்தி ஓரு ரன்களை எடுத்தது.

முதல் இன்னிங்ஸை போலவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி நூற்றி முப்பத்தி ஆறு ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதோடு போட்டியிலும் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதின் மூலம் புதிய சாதனையை படைத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் ஆறாயிரம் ரன்கள் குவித்து இரு நூறு விக்கெட்டுகளை எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்த சாதனையை செய்த மூன்றாவது வீரராக மாறினார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் கேரி சோபர்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜாக்குவஸ் காலீஸ் ஆகியோர் இந்த சாதனையை டெஸ்ட் போட்டிகளில் செய்திருந்தனர்.







