80ஸ்ல பார்த்திங்கன்னா பாலு மகேந்திராவின் பல படங்கள் வெளியானது, மன நலம் பாதித்த பெண்ணின் வாழ்க்கை முறையை மூன்றாம் பிறையிலும், மன நலம் பாதித்த ஒரு ஆணின் நிலைமையை தனது மூடுபனியிலும் சொல்லி இருந்தார், இவரின் படங்கள் வித்யாசமாய் இருக்க எல்லோரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது.
இவர் சீரியஸ் கதைகளை மட்டும் அணுகாமல் அவ்வப்போது காமெடி கலந்த கதைகளையும் இயக்கி வந்தார், அப்படி ஒரு படம்தான் ரெட்டைவால் குருவி.
அப்போது முன்னணியில் இருந்த தான் அறிமுகப்படுத்திய மோகனை வைத்து பாலுமகேந்திரா இயக்கிய அருமையான ஒரு படம்.
இவரின் படங்களில் எல்லாம் இந்த இரண்டு மனைவி கதாபாத்திரங்கள் கான்செப்ட் அதிகம் இருக்கும். இதில் இந்த படத்தின் முக்கிய கதையே அதுதான். ஏற்கனவே அர்ச்சனாவை திருமணம் செய்து வாழ்ந்து வரும் மோகனுக்கு பாடகி ராதிகா மீது ஒரு கண், அவரை கவர்ந்து அவரை திருமணம் செய்கிறார், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத நிலையில், இப்போது அர்ச்சனா கர்ப்பம் தரிக்க, தெரியாமல் ராதிகாவோடு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மோகன், ராதிகாவும் கர்ப்பம் தரிக்க என்ன செய்வது என தெரியாமல் இரு மனைவிகளையும் சமாளிக்க மோகன் ஆடும் தகிடுதத்த ஆட்டம்தான் படம். அந்த இறுதிகட்ட ஆஸ்பத்திரி காட்சிகள் ரொம்ப நன்றாக இருந்தன.
சும்மா கலகலன்னு வந்திருந்த இப்படத்தில் இளையராஜா போட்டுக்கொடுத்த பாடல்களும் உற்சாகம் கரைபுரண்டு ஓடவைத்தன. படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், மோகன், ராதிகா, அர்ச்சனாவை வைத்தே இறுதி வரை கலகலப்பாக இயக்குனர் பாலு மகேந்திரா கொண்டு சென்று இருப்பார்.









