இயக்குனர் ராஜ்கபூரும், இளையராஜாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்றால், ராஜ்கபூர் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர். கோம்பை என்ற ஊர் நாய்களுக்கு புகழ்பெற்ற ஊர் அந்த ஊரை சேர்ந்தவர் ராஜ்கபூர்.
ஆரம்பத்தில் ஜி.எம் குமார் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜ்கபூர் முதன் முதலாக இயக்கிய படம் தாலாட்டு கேட்குதம்மா. கடந்த 1991ல் தீபாவளிக்கு வெளிவந்து நன்றாக ஓடியது.
அதற்கு முன்பே ஜி.எம் குமாரின் அறுவடை நாள், பிக்பாக்கெட் என பணிபுரிந்தாலும், அதற்கு பின்பு தாலாட்டு கேட்குதம்மாவில் பாட்டெல்லாம் ஹிட் செஞ்சு கொடுத்துட்டாலும், இளையராஜாவுக்கு ராஜ்கபூர் தன் சொந்த ஊர் பகுதியை சேர்ந்தவர் என தெரியாதாம்.
தாலாட்டு கேட்குதம்மா முடிந்த உடன், ராஜ்கபூரை அழைத்த இளையராஜா, நல்ல இயக்குனர் என்ற அடிப்படையில் தான் அடுத்ததாக சின்ன பசங்க நாங்க பட வாய்ப்பையும் அந்த தயாரிப்பாளரிடமிருந்து கேட்டு ராஜ்கபூர்க்காக வாங்கி கொடுத்துள்ளார். தாமதமாகத்தான் ராஜ்கபூர் தன் ஊர் என இளையராஜாவுக்கு தெரிந்ததும் ஏன்யா முன்னாலயே சொல்லக்கூடாதா என செல்லமாக வருத்தப்பட்டார் என சொல்வதுண்டு.









