கடந்த 1976ல் வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா, 1000க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து சாதனை படைத்தவருக்கு சமீபத்தில் அரசு விழா நடத்தி கெளரவித்தது.
இளையராஜாவின் இசை இனிமையானது என எல்லோருக்கும் தெரியும், இவரது இசையால் கட்டுக்கடங்காத ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள், இவரை பிடிக்காது என பலர் சொன்னாலும் மறைமுகமாக இவரின் இசையை ரசிப்பவர்கள் பலருண்டு, அவரின் பேச்சு பிடிக்காது பாட்டு பிடிக்கும் என சொல்லும் நபர்களும் சோசியல் மீடியாக்களில் இருக்கிறார்கள்.
இளையராஜா ரசிகர்களிடம் நெருங்கி வரும் விதமாக பல படங்களில் அவருக்கு காட்சியமைப்புகள் இருக்கும், பொங்கி வரும் காவேரி படத்தில் இந்த ராசாவ நம்பி வந்த யாரும் அட மோசமே போகப்போறதில்லே, பெரிய வீட்டு பண்ணக்காரன் படத்தில் சும்மா நீ நிக்காதே பாடலில் இளையராஜாவின் ஓவியம் சுவற்றில் வரைந்திருப்பது போல காண்பித்திருப்பார்கள், ரசிகர்களோடு கனெக்ட் ஆவதற்காக இது போல பாடல்களையும் காட்சிகளையும் வைத்திருந்தார்கள்.
அது போல இளையராஜாவை படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து, ஒரு நிமிட காட்சிகளில் இளையராஜா தலை காட்டியுள்ளார். அதில் சாதனை படத்தில் வரும் ஓ வானம்பாடி பாடலுக்கு முந்தைய கம்போசிங்கிலும், ரெட்டை வால் குருவி படத்தில் ஒரு கம்போஸிங் காட்சியிலும், வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் ஒரு சின்ன காட்சியிலும், தர்மபத்தினி படத்தின் நான் தேடும் செவ்வந்திப்பூவிது பாடலின் ஒரு காட்சியிலும் இளையராஜா தோன்றி நடித்துள்ளார்.









