1988ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் ஜீவன் பாடுது. 80களின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் செய்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், இம்முறை இணைந்தது அந்த நாளைய பிரபல நாயகன் கார்த்திக்குடன். கார்த்திக் , சரண்யா,சுதா ஸ்வர்ணலட்சுமி என்ற இருவர் நாயகிகள்.
கல்லூரியில் படிக்கும் நாயகி சரண்யா, அங்கு பரபரப்பாக பேசப்படும் சுரேந்திரன் என்பவரை பற்றி தெரிந்து கொள்கிறார், அவரின் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை அறிந்து அவரை அறியாமல் அந்த கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்புகொள்கிறார், ஆனால் சுரேந்திரன் உயிருடன் இல்லை என்பதை அறிகிறார், சுரேந்திரன் தற்… லை செய்து கொண்டதாக அவருக்கு தெரிய வருகிறது.
அவரின் கல்லறைக்கு சென்று அவருக்காக வருத்தப்படுகிறார், ஒரு கட்டத்தில் இறந்து போன சுரேந்தரான கார்த்திக்கின் ஆவி சரண்யாவிடம் சென்று என் கல்லறைக்கு செல்ல வேண்டாம் என தடுக்கிறது.
கார்த்திக்க்குக்கு ஒரு ப்ளாஷ்பேக், பிலோமினாவாக வரும் சுதாவை காதலிக்கிறார், அதற்காக கிறித்தவ மதத்திற்கும் மாறுகிறார், கார்த்திக்கின் தந்தை இதனால் அதிர்ச்சியில் இறக்க, பிலோமினாவோ வேறு ஒரு தொழிலதிபரை மணக்கிறார், இதனால் கார்த்திக் இறக்கிறார்.
இந்த கதைகளை கேள்விப்படும் நாயகி சரண்யா கார்த்திக் மீது இன்னும் அதிக காதல் கொள்கிறார், ஆனால் கார்த்திக்தான் ஆன்மாவாகி விட்டாரே? இதனால் தனக்கு வேறு பணக்கார தொழில் அதிபர் மாப்பிள்ளை பார்த்திருந்தும் ஆன்மாவோடு கலந்தால்தான் கார்த்திக்கோடு சேர முடியும் என அவரும் மலையில் இருந்து குதித்து இறக்கிறார். இப்படி வித்யாசமான முறையில் சொல்லப்பட்டு வெளிவந்தது இக்கதை.
படத்திற்கு பலம் இளையராஜாதான். கட்டிவச்சுக்கோ, ஒரே முறை உன் தரிசனம், காதல் வானிலே, மெளனம் ஏன் போன்ற அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தன.
				
 