உற்சாகத்தை இழந்து வரும் தீபாவளி படங்கள்

உற்சாகத்தை இழந்து வரும் தீபாவளி படங்கள்

தீபாவளி என்றாலே அதிகாலை எழுந்து குளித்து முடித்து பலகாரங்கள், புத்தாடைகளை இறைவனுக்கு படைத்து வீட்டில் இருக்கும் அனைத்து உறவுகளுடனும் சந்தோஷமான மன நிலையில் கொண்டாடும் ஓர் இனிய பண்டிகை.

கொண்டாட்ட மன நிலையுடனே நண்பர்களுடன் அன்றோ அல்லது தீபாவளிக்கு மறுநாளோ புத்தாடை அணிந்து சென்று தீபாவளிக்கு என்ன படம் போட்டிருக்கிறார்களோ அதை சென்று நேரில் பார்த்து குதூகலித்து வருவது வாடிக்கையான ஒன்றுதான்.

 

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்கள் தீபாவளி படங்களாக வந்தன, ஒருவர் ஆக்சன் ஹீரோ, இரண்டாமவர் கமர்சியலாக மட்டுமல்லாது ஏதோ ஒரு கருத்துள்ள படம் நடிப்பவர், எம்.ஜி.ஆர் கமர்சியல் படத்துல நடித்தே ரசிகர்களை தன் வசமாக்கி தமிழ் நாட்டையே ஆளும் நிலைக்கு சென்றவர். சிவாஜி கணேசன் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

 

அதற்கு அடுத்து வந்த ரஜினி, கமல் இருவரில் ரஜினி கமர்சியல் படங்களிலும், கமலும் அந்த நாட்களில் பெரும்பாலும் கமர்சியல் படங்களிலும் சில நேரங்களில் கலைப்படங்களுடனும் தீபாவளி ரேஸில் குதித்து வந்தனர். இவர்களுக்கு பால் அபிசேகம் பன்னீர் அபிசேகம் என ஆராதித்தனர் ரசிகர்கள்.

 

அடுத்து வந்த விஜய், அஜீத் இருவருமே ஆக்சன் ஹீரோக்கள் தான் முன்பு சொன்ன எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியோ ரஜினி கமல் மாதிரியோ மாறுபட்ட படங்களில் நடிப்பவர்கள் அல்ல, இவர்களின் படங்களும் தீபாவளிக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அடுத்து தனுஷ், சிம்பு இவர்களை கொண்டாடியது ஒரு தலைமுறை. இவர்கள் படம் வரும்போது கட் அவுட் என்ன ப்ளக்ஸ் போர்டு என்ன என அதகளப்படும். வர வர அந்த உற்சாக மன நிலை படங்கள் எல்லாம் குறைந்துவிட்டது.

 

இப்போது நாம் எந்த தலைமுறையில் இருக்கிறோம் என்றே தெரியவில்லை. அது போல் தீபாவளிக்கு என்று வரும் படங்களும் பெரிய நடிகர்கள் படங்கள் அல்லாது வளர்ந்து வரும் சின்ன சின்ன நடிகர்கள் படங்கள்தான் வருகிறது. இதனால் தீபாவளி படங்கள் வர வர களையிழக்க தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இந்த தீபாவளிக்கு பைசன், ட்யூட், டீசல் போன்ற சின்ன நடிகர்களின் படங்களே ரிலிஸ் ஆகின்றன.