மனோபாலா இயக்கிய அருமையான குடும்ப சித்திரம்- இந்த படம் பெற்ற வெற்றி

மனோபாலா இயக்கிய அருமையான குடும்ப சித்திரம்- இந்த படம் பெற்ற வெற்றி

என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், தனது நண்பர் மணிவண்ணன் இயக்கிய கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் இடம்பெற்ற என் புருசன் தான் எனக்கு மட்டும்தான் பாடலை பட தலைப்பாக வைத்தார் மனோபாலா. படத்துக்கு சரியான தலைப்பாகவும் அது இருந்தது. கணவன் மீது கண் மூடித்தனமான அன்பு வைத்திருக்கும் ஒரு பெண், அந்த அன்பை தவறான முறையில் வெளிப்படுத்தி வாழ்க்கையை இழப்பது, பிறகு ஒன்று சேர்வது என பின்னப்பட்ட கதை

அந்த காலகட்டத்தில் மனோபாலா வளர்ந்து வந்த இயக்குனர், பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட் ஆக இருந்தாலும் உடனே அவருக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை. ஆகாய கங்கை பட வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தோல்வி அடைய தோல்வியே அவரை தொடர்ந்து துரத்திய நிலையில் விரக்தியான இவர், உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வேண்டுதல் செய்து அதன் பின் நடிகர் மோகனின் உதவியாலும் கதாசிரியர் கலைமணி உதவியாலும் முன்னேறியவர்.

பிள்ளை நிலா படத்துக்கு பின் முன்னணி இயக்குனராக உயர்ந்து அதுவரை அவர் பட்ட கஷ்டம் எல்லாம் பஞ்சாய் பறந்தது, ரஜினிகாந்த், விஜயகாந்த் என பலரை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது, அப்படித்தான் என் புருசன் தான் எனக்கு மட்டும்தான் வாய்ப்பும் மனோபாலாவுக்கு வந்தது. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி அனைவரும் பார்க்கும் வகையில் தரமான, கலகலப்பான ஆக்சன் கலந்த குடும்ப படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் மனோபாலா.

திமிர் பிடித்த மனைவியாக வரும் ரேகாவும், விஜயகாந்த் மீது பாசம் காட்டும் தோழியாக வரும் சுகாசினியும் தான் படத்தின் முக்கிய கரு. சுகாசினியின் நட்பால் ஏற்கனவே திமிர் பிடித்தவரான ரேகா இன்னும் திமிராகிறார். விஜயகாந்தின் பிள்ளைகளை பள்ளியில் அடித்ததற்காக வீடு புகுந்து விஜயகாந்த் ரேகாவை அடிக்கும் காட்சிகள் பரபரப்பாக இருந்தன, அதுவும் அடிக்கும்போது டிவியில் சவுண்ட் அலற வைத்து அடிப்பது என பரபரப்பாக படமாக்கி இருந்தார் மனோபாலா. படத்தில் நடித்த வி.கே ராமசாமியின் கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. இந்த படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.

மனோபாலாவின் நெருங்கிய நண்பரான கலைமணியின் எழுத்தும், இளையராஜாவின் இசையில் வந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகின.1989ல் வெளியான இப்படம் இன்றளவும் பார்த்து ரசிக்கும் படமாகும்.