Latest News
குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அனுமதி…!
குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு உலக சுகாதார மையம் அனுமதி வழங்கி இருக்கின்றது.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த வாரம் மட்டும் 17 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி வரும் மற்றும் உயிரிழப்பதை தடுப்பதற்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் பெரியவர்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியிருக்கின்றது. இது ஆப்பிரிக்கா மற்றும் இதர நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய படியாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கின்றது .
பவேரியன் நாடிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த தடுப்பூசியை கவி மற்றும் யுனிசெப் போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டும் இருப்பதால் தடுப்பூசி இருப்பு என்பது குறைவாக இருக்கின்றது.
நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதிகளில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் அதானம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இந்த தடுப்பூசியை 2 டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க முடியும். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.