மெத்தனால் கலந்த ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற போலியான செய்தியை நம்பிய 100 கணக்கான ஈரான் மக்கள் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இப்போது இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அபாயகரத்தை எட்டியுள்ளது. அதன் ஒரு கட்டமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மற்றொரு நாடு ஈரான். அங்கே இதுவரை 2400 பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மெத்தனால் கலந்த ஆல்கஹாலைக் குடித்தால் கொரோனா பரவாது என்பதை நம்பி குடித்த 1000 பேருக்கு மேற்பட்டோர் வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கோவிட் 19 ஆல் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்துள்ள நிலையில் இப்போது இந்த சம்பவம் அங்குள்ளவர்களை மேலும் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.