ரஷ்யாவில் மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்க சிங்கங்களை சாலைகளில் உலவவிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 340க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
ஆனால் ரஷ்ய அரசாங்கம் தன் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக சாலைகளில் 500 சிங்கங்களை உலவவிட்டுள்ளதாக புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளன. ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை எனத் தெரியவந்துள்ளது.
அது சம்மந்தமாக வைரலாகும் புகைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஷூட்டிங்கின் போது வெளியானது என அப்போது வெளியான தினசரிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.