இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதுகாப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிவிட்டரில் அறிவித்த அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக வேலைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்பதால் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
மருத்துவமனையில் அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த செய்தியானது அந்த நாட்டு மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. கொரோனாவால் இதுவரை இங்கிலாந்தில் 51000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.